Saturday, March 26, 2011

சிவமயம் - திரு அண்ணாமலை - SPB பாடல்

மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

90 பொது
பாடல் எண் : 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


பொழிப்புரை :
 இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

பாடல் எண் : 2
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.


பொழிப்புரை :
 ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே ; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும் .

குறிப்புரை :
 ஞானமும் - பரஞானம் . கல்வி - அபரஞானம் . ஞானமும் கல்வியும் - கல்வியால் விளையும் அறிவும் கல்வியும் . நானறிவிச்சை - நான் அறிந்தனவாய மந்திரம் அல்லது கலையுணர்வு . நன்னெறி - ஞானம் , வீடுபேறடையும் வழி .



பாடல் எண் : 3
ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.


பொழிப்புரை :
 இறைவனுக்கு ஆளாகமாட்டார் ; அவ்வாறு ஆளாகிய மெய்யடியார்களைச் சார்ந்து உய்யவும் மாட்டார் . மீளா ஆளாய் மெய்ம்மையுள் நிற்கும் ஆற்றல் இல்லார் ; அத்தகைய இழிந்தவர் செவிகள் துளையிட்டுப் பயன்படுத்தவியலாத செவியோ ? அந்தோ ! வீணே இறந்து மண்ணாகி ஒழிவர்! 


பாடல் எண் : 4
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பொழிப்புரை :
 நாணமற்றவர்களே ! துன்பம் மிக்க வாழ்வினைக் கொண்டு என்ன செய்வீர் ? நீர் இறுதியில் சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு ஆன்றோர் சொற்களே சான்று . திருப்பாற்கடலினின்றெழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால் , உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிவிடும் .

குறிப்புரை :
 நடலை - துன்பம் . என்செய்திர் - உயிர்கட்குப் பயன் தரும் செயல்கள் என்செய்தீர்கள் . நாணிலீர் - வெட்கம் இல்லாதவர்களே . சுடலை - இடுகாடு . சேர்வது - அடைவது , சொல் பிரமாணம் - சத்தப்பிரமாணத்தாலறிவதொன்றேயன்றி காட்சி அநுபவத்தாலும் அறிவதாம் . உடலினார் - உடல் . இழித்தற் பொருளில் வந்தது ஆர் விகுதி . ஊர்முனிபண்டம் - பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருளாகும் . கைவிட்டால் - காத்தலை நீங்கினால் .


பாடல் எண் : 5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கை கேயிரை யாகிக் கழிவரே.


பொழிப்புரை :
 பூக்களைக் கையிற்கொண்டு சிவபிரானின் பொன்னார் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும் , நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர் .

குறிப்புரை :
 பூக்கைக்கொண்டு என்க . பொன்னடி - பொன்னைப் போலப் பொதிதற்குரிய திருவடி . நாக்கைக்கொண்டு - நாவைக் கொண்டு என்க . நாமம் - இறைவன் திருப்பெயர் . நவில்கிலார் - கூறாதவர்கள் . ஆக்கைக்கே - உடலுக்கே . இரை - உணவு . அலமந்து - வருந்தி . காக்கைக்கு - காகங்களுக்கே . இரையாகி - உணவாகி . கழிவர் - அழிந்தொழிவர் .


பாடல் எண் : 6
 குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
 நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
 அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
 பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.


பொழிப்புரை :
 விதியற்றவர்களே ! குறிகளும் , அடையாளமும் , கோயிலும் , நெறிகளும் , அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது என்னையோ ?

பாடல் எண் : 7
 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
 தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
 சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
 வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.


பொழிப்புரை :
 தன்னை வாழ்த்துதற்கு வாயும் , தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும் , தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல் , வினையேன் நெடுங்காலம் வீழ்த்தியவாறு என்னே ?.

குறிப்புரை :
 மடநெஞ்சு - அறியாமையின் பாற்பட்ட மனம் . தாழ்த்த - வணங்க . சென்னி - தலை . சூழ்த்த மாமலர் - ஆராய்ந்து எடுத்த சிறந்த மலர் . சூழ்ந்த - சூழ்த்த வலித்தல் விகாரம் . துதியாதே - போற்றி வணங்காமல் . வினையேன் - தீவினையேனாகிய நான் . நெடுங்காலம் - பலகாலம் . வீழ்த்தவா - கழித்தேன் . ஆ அது வருந்தத் தக்கது .

பாடல் எண் : 8
 எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
 தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
உழுத சால்வழி யேயுழு வான்பொருட்
 இழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.


பொழிப்புரை :
 எழுதிய பாவைச் சித்திரம் போன்ற அழகுடைய பெண்கள் திறத்தின் நீங்கி நான்தொழுது போற்றி நிற்க . என்னையும் ஆராய்ந்து கொண்டு உழுத சால் வழியே பின்னும் உழுவதன் பொருட்டு மிக்க இழிவுடைய நெஞ்சம் செய்கின்றது தானா என்னை ?.

பாடல் எண் : 9
  நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
 புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
 பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
 நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.


பொழிப்புரை :
 நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சுளே புகுந்து நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் , பொய்ம்மையாளர் பூசையிற் பூவையும் நீரையும் கண்டு அவர் தம்மை நாணிச் சிரித்து நிற்பன் .


குறிப்புரை :
நெக்கு நெக்கு - மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து . உருகி உருகி என்க . நெஞ்சுள் - மனத்தினுள்ளே . புக்கு நிற்கும் - புகுந்து எழுந்தருளியிருக்கின்ற . பொன்னார்சடை - அழகு பொருந்திய சடை , பொக்கம் - பொய் . அவர்தம்மை - அவரை நாணி - வெட்கமடைந்து . நக்குநிற்பர் - ஏளனநகை புரிந்திருப்பர் .

பாடல் எண் : 10
 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
 மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
 உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
 முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.


பொழிப்புரை :
 விறகில் தீப்போலவும் . பாலிற்பொருந்திய நெய்போலவும் , மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான் .

குறிப்புரை :
 விறகில் தீயின் - விறகின்கண் மறைந்திருக்கும் நெருப்பைப் போல . நன்பாலில்படு - நல்ல பாலில் மறைந்திருந்து பின்னர்த் தோன்றும் . மாமணிச் சோதியான் - சிறந்த மணியின் கண் ஒளி மறைந்திருந்து சாணை பிடித்த பின்னர் வெளிப்படல் போல உள்ளத்துள்ளே மறைந்து நிற்பவன் . உறவு - அறிவு , உணர்வு , அன்பு , மாறிக்கூறுவாருமுளர் . அறிவாகிய கயிற்றினாலே . முறுகவாங்கிக் கடைய - நன்றாக இழுத்துக்கடைய . முன்னிற்கும் - நம்முன் தோன்றி அருளுவான் . விறகு . பால் , மணி இவற்றுள் மறைந்து நிற்கும் தீ முதலானவற்றை முறையே முறுகக் கடைதல் , வாங்கிக் கடைதல் , கடைதல் என்பனவற்றால் வெளிப்படுத்தலாம் . அதுபோலப் பக்குவம் இல்லாதோர் பக்குவான்மா இவர்களுக்குக் கடவுள் தோன்றியருளும் வழி கூறப்பட்டது . கயிற்றினால் வாங்கிக் கடைதல் முன் இரண்டற்கும் பொது .

நன்றி: 
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5090 
நன்றி: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5090

Sunday, March 20, 2011

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்




வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.
தொல்லையிரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே –எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
என்று திருவாசகம் பாடப்படும் இடம் எங்கும் போற்றித் துதிக்கப்படும் அருளாளர் திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான். இப்பெருமானின் குருபூஜைத் தினமான ஆனிமகத் திருநாள் தமிழர்கள் யாவரும் போற்றவேண்டிய நன்னாளாகும்.........மேலும் படிக்க..

Sunday, March 6, 2011

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (கண்ணன் பாட்டு)



சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே


பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே


ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி

உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா

என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயில் நின்னதன்றோ?


 - மஹாகவி சுப்ரமணிய பாரதியார்

விருப்பம் :)