Saturday, March 31, 2012

நான்கு வேண்டாம்; நான்கு வேண்டும்!



முதுமைக்கு வேண்டியதை இளமையிலேயே தேடி வைத்துக்கொள்ள வேண்டும். வயதானால் சம்பாதிக்க முடியாதல்லவா? கொஞ்சம் நமக்கென்று சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் வாழ்க்கைக்கு நன்மை!
அதுபோல, மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் செய்வதைக் கொண்டுதான் "மறுபிறப்பு' அமையப்போகிறது.
நன்றாக உழைத்த விவசாயிக்கு ஆறு மாதம் கழித்து வீடு நிறைய நெல் இருக்கும், அவன் உழைத்த உழைப்புக்கு. இப்பொழுது நல்ல பக்தி மார்க்கத்திலே இருந்து, தான தருமங்களைச் செய்து, தன்னாலே முடிந்த அளவுக்கு உதவி செய்கிறவர்கள்தான் மறுபிறப்பிலே இந்திரலோகம் பெறுவார்கள். சிரமமில்லாமல் பலன் வரும். நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல ஆரோக்கியம், வயது 80 ஆகியும் 60தான் மதிப்பு போடலாம். இப்படியெல்லாம் அமைய வேண்டுமென்றால் முன்செய்த புண்ணியம் வேண்டும். ""பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்'' என்பார்கள். இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடுகின்றார். ""ஆண்டவனே! எனக்கு மறுபிறப்பு ஒன்று வருமானால், (வராமல் இருந்தால் நல்லது, ஒருவேளை வரக்கூடிய சூழ்நிலை வந்தால்) "நான்கு வேண்டாம்; நான்கு வேண்டும்' என்கிறார்.


""திமிர வுததி யனைய நரக
செனன மதனில் - விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு - மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் - வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் - வரவேணும்''



மறுபிறப்பு ஒன்று வருமானால் செவிடு வேண்டாம். அருணகிரியார் முருகப் பெருமானைப் பார்த்து, ""சுவாமி! அடுத்த பிறப்பு வருமானால் என் காது செவிடாய் இருக்கக் கூடாது''. "குருடு' - கண் இல்லையானால் ஆண்டவனுடைய அருளுருவைப் பார்த்து ஈடுபட முடியாது. அபிஷேக அலங்காரங்களைக் காணமுடியாது. ""வடிவு குறைவு'' - அங்கக் குறைவு இருக்கக்கூடாது. கையில்லை என்றால் சுவாமியை எப்படிக் கும்பிடுவது? காலில்லை என்றால் எம்பெருமான் கோயிலை எப்படி வலம் வருவது? ""சிறிது மிடியும் அணுகாதே'' - வறுமை கொஞ்சம்கூட இருக்கக்கூடாது. மனிதனை அடியோடு வாட்டி வதைப்பது வறுமை. அதனால்தான் ""கொடிது கொடிது வறுமை கொடிது'' என்று ஒளவையார் சொன்னார்.
ஆகவே, ஆண்டவனே எனக்கு மறுபிறப்பு வருமானால் வறுமை இருக்கக்கூடாது. இந்த நான்கும் வேண்டாம் என்று சொன்னார்.
இதற்கு பதிலாக நான்கு வேண்டும் என்கிறார். அந்த நான்கு, அமரர் (தேவர்) வடிவம், உயர்குடிப் பிறப்பு, நல்லறிவு, நல்லொழுக்கம் இவை நான்கும் தந்தருள வேண்டும் என்கிறார். தினமும் பூஜையில் சொல்ல வேண்டிய பாட்டு இது. வேடிக்கையாகச் சொல்லவில்லை. அன்றாடம் பூஜையிலே இந்தப் பாட்டைச் சொன்னால் முருகப்பெருமான் 12 கையாலே தருவார்.
அடுப்பில்லாத வீடு இருக்கலாம்; ஆனால், திருப்புகழ் இல்லாத வீடு இருக்கக்கூடாது. வேதத்தின் சாரம் திருப்புகழ்!

நன்றி: தினமணி இடுகை-நான்கு வேண்டாம் ; நான்கு வேண்டும் !

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)